அமீரகம்-சீனா இடையே நல்லுறவு இருந்து வருகிறது. வர்த்தகம் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளும் இணைந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமீரகத்தில் செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் கொரோனா பரவலை தடுப்பது மற்றும் பாதிப்பை எதிர்கொள்வது குறித்து அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் சீன நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் பேசியதாவது:-
உலக அளவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. கொரோனா பாதிப்பை கையாளுவதில் சீனா பெரும் பங்கு வகித்துள்ளது.
மேலும் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் சர்வதேச அளவில் ஒத்துழைப்பை சீனா அளித்து வருகிறது.அமீரகத்தை பொறுத்தவரையில் இதுவரை 30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிகப்படியான பரிசோதனைகள் இங்குதான் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமீரகம் ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரத்தை அறிவித்து வருகிறது.சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அமீரகத்தில் வெகுவாக குறைந்து வருகிறது.
பல நாடுகள் இந்த நிலையை அடைய ஒத்துழைப்பு அளித்துள்ளன. அதேபோல அமீரகம் சார்பிலும் 935 மெட்ரிக் டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் 63 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 9 லட்சம் மருத்துவ பணியாளர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆலோசனையில் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி அமீரகத்தின் ஒத்துழைப்புக்கு சீனா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.



