இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பாரியளவில் உயர்வடைந்து வருகின்றது.
கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 66 ஆயிரத்து 999 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, இந்தியாவில் நாளொன்றில் அதிக கொவிட்-19 நோயாளர்கள் நேற்றைய நாளில் பதிவாகியுள்ள நிலையில், தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 23 இலட்சத்து 96 ஆயிரத்து 637 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் 942 பேர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மஹாராஷ்டிராவில் 12 ஆயிரத்து 712 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் 344 மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொவிட்-19 காரணமாக தமிழகம் அதிக பாதுகாப்பை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 871 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக உயர்வடைந்துள்ளது.
119 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், ஃப்ரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.
ஜேர்மனியில் கடந்த 3 மாதங்களின் பின்னர், கடந்த 24 மணிநேரத்தில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, ஜேர்மனியில் புதிதாக ஆயிரத்து 200 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அதேநேரம், கடந்த மே மாதம் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து, முதல் முறையாக ஃப்ரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 524 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
ஸ்பெயினில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆயிரத்து 418 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



