பாகிஸ்தானில் அதிவேக நெடுஞ்சாலையில் குழந்தைகளுடன் காரில் பயணித்த தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிராக நான்காவது நாளாக பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய பஞ்சாப் மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் காரில் பயணித்த முப்பது வயதுப் பெண் மற்றும் இரு குழந்தைகள் கடந்த புதன்கிழமை இரவு, கிழக்கு நகரமான லாகூருக்கு வெளியே எரிபொருள் முடிந்த நிலையில் வீதியில் நின்றுள்ளனர்.
உதவிக்காக குறித்த பெண் பொலிஸாருக்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.
இந்த சூழலில் அவ்வழியால் வந்த ஆண்கள் இருவர் துப்பாக்கி முனையில் அவர்களை காரில் இருந்து இழுத்துச் சென்றுள்ளதுடன் குறித்த பெண்ணை நெடுஞ்சாலையில் உள்ள வயல் பகுதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
பொலிஸார் வருவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தை கண்டித்து நீதி வேண்டி பாகிஸ்தானில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.



