சுதந்திர தின நிகழ்வு மற்றும் அது குறித்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 4ம் திகதி சுதந்திர தின நிகழ்விற்காக இடம்பெறும் ஒத்திகை நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 3ம் திகதி வரை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெறவுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்படுத்தப்படவுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி பொரளை முதல் தாமரை தடாகம் திசை நோக்கி பயணிக்கும் வாகனங்களும், தாமரை தடாக திசையில் இருந்து பொரளை நோக்கி பயணிக்கும் வாகனங்களும் குறித்த காலப்பகுதியில் பொரளையில் இருந்து ஹொட்டன் பிரதேசம், விஜயராம மாவத்தை ஊடாக வோட் பிளேஸ் திசைக்கு பயணித்து நகர மண்டபம் மற்றும் யூனியன் பிளேஸ் திசை நோக்கி பயணிக்க முடியும்.
பொரளை திசை நோக்கி பயணிக்கும் வாகனங்களும் இந்த வீதிகள் ஊடாக பயணிக்க முடிவதுடன் குறித்த பகுதிகளில் ஏனைய மாற்று வீதிகள் தொடர்பில் சமிக்ஞை பதாதை மூலம் பொலிஸ் அதிகாரிகளால் அறிவுறுத்தும் செயற்பாடும் இடம்பெறும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த போக்குவரத்து திட்டத்தால் காலி வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கும் பௌத்தலோக மாவத்தை ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கும் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



