கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதோடு, சிறுபான்மையின மக்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியாருடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இரணைதீவு பிரதேசத்தில் நீண்ட தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விதிமுறைகளை உள்ளடக்கிய சுற்று நிருபத்தை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த விடயத்தை, மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண சுகாதார பணிப்பாளர், பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உரிய அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று ஆராய்ந்து வருகிறது.
இக்குழு, மாகாண மட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் இடங்களை அடையாளம் காணவுள்ளது.
அவ்வாறு, குறித்த இடங்கள் அடையாளம் காணப்படும் வரை தற்காலிகமாகவே, சடலங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



