போதைப்பொருட்களை பாவித்த பின்பு வாகனங்களை செலுத்துவோரை கண்டுபிடிக்க உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நவீன வகை உபகரணங்களை வாங்குவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
போதைப்பொருளை உட்கொண்ட பின்னர் வாகனங்களை ஓட்டும் சாரதிகளால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
குடிபோதையில் மற்றும் போதைக்கு அடிமையான சாரதிகளை கைது செய்வதற்காக நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
“ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அல்லது போதை மருந்து உட்கொண்ட பிறகு வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டால், அவருக்கு நீதிமன்றத்தால் ரூ .25,000 அபராதம் விதிக்கப்படலாம். கூடுதலாக, நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
மேலும், அந்த குறிப்பிட்ட நபரின் சாரதி உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ முடியும், ”என்று அஜித் ரோஹண கூறினார்.



