களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்திருந்த நிலையில், நேற்றைய தினம் (01) கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெற்றிக் தொன் சீனியை, அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் N.D.S.P.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த சீனித் தொகையானது, கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபா என்ற இறக்குமதித் தீர்வை வரியானது, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல், 25 சதமாகக் குறைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அன்றைய நாளில், நாட்டுக்குள் 88,878 மெற்றிக் தொன் சீனி காணப்பட்டதாக அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 2021 ஜூன் 30ஆம் திகதி வரை, 584,000 மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டின் மாதாந்தச் சீனித் தேவையின் அளவு 35,000 மெற்றிக் தொன் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், வருடாந்தச் சீனித் தேவைக்கு மேலதிகமாகச் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டுக்குள் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதான மாயையை உருவாக்கி, நுகர்வோரைச் சிரமத்துக்கு உட்படுத்தி, அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் முயற்சியொன்று, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டமையைக் காணக்கிடைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமித்து, சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்கான அதிகாரங்களை அவருக்கு வழங்கவும், ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனியைக் கண்டுபிடிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டறியப்படும் சீனித் தொகையை, கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here