தமிழகத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகள் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழகத்தில் ஊரடங்கும் அமுலில் உள்ளது. இருந்தபோதிலும் ஊரடங்கில் பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரசிஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகத்தில் நேற்று 21 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 716 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மருத்துவமனையில் நேற்று நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து 2 ஆயிரத்து 134 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று சென்னையில் 46 குழந்தைகள் உட்பட 510 பேரும் அரியலூரில் 36 பேரும் செங்கல்பட்டில் 6 குழந்தைகள் உட்பட 35 பேரும் பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 27 பேரும் காஞ்சிபுரத்தில் 24 பேரும் திருவண்ணாமலையில் 13 பேரும் ராணிப்பேட்டையில் 2 வயது ஆண் குழந்தை உட்பட 9 பேரும் தேனியில் 7 பேரும் விருதுநகர், கரூர், விமான நிலைய முகாமில் தலா 4 பேரும் நெல்லையில் 3 பேரும் திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் வேலூர், விழுப்புரம்,தென்காசி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோாின் மொத்த எண்ணிக்கை 74,292 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 2,415 போ் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் இதுவரை 24,420 போ் பூரண குணமடைந்துள்ளனர் என்பதுடன், 47,457 போ் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here