யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில், இந்தியாவுக்கு திரும்பிய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து அதிகளவில் பதட்டமடைய அவசியமில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர்  வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  

குறித்த இந்தியரிலிருந்து, ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு மிக அரிதாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை தங்களது நாட்டுக்கு மீட்கும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தங்கிருந்த நிலையில், கப்பல் மூலம் இந்தியாவுக்கு திரும்பிய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அவர் யாழப்பாணம் இணுவில் மற்றும் ஏழாலை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், குறித்த விடயம் தொடர்பில் வினவியபோது, போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இந்த விடயத்தை தெரிவித்தார்.  

இதேவேளை, இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.  

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்க அமையவே அங்கு சேகரிக்கப்பட்ட 13 பேருடைய மாதிரிகளும் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

குறித்த வர்த்தகருடன் தொடர்பை பேணியவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here