தமிழகத்தில் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15) அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று வெளியூருக்குச் சென்று விட்ட நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் அவளது வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் மாணவி வலியால் அலறினார்.

பின்னர் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அவள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொன்ற இருவரை பொலிசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.5.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று (11–ந் திகதி) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த குற்றவாளிகள் மீது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கொடூர செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

India, Tamil News, Derana Tamil, Tamilnadu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here