பொதுத் தேர்தலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை தேர்தலுக்கான திகதி அறிவிக்க இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை தாமதப்படுத்தும் எண்ணம் எதுவும் ஆணைக்குழுவுக்கு கிடையாதெனவும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதில் காலம் கடத்தும் எண்ணம் ஆணைக்குழுவுக்கு கிடையாது. முன்னைய தேர்தல்களை போன்று இதனை பார்க்க முடியாது.

கொரோனா தொற்று பரவலுக்கு முகம்கொடுத்துக் கொண்டே தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாகவும் இது சவால் மிக்கதொரு விடயமானதாகவும் இருப்பதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

தேர்தல் சட்டவிதிகளை பேணுவதோடு சுகாதாரத்துறையின் வழிகாட்டல்களையும் அவசியம் பின்பற்ற வேண்டியதன் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இதன் பொருட்டு மாவட்ட மட்டத்தில் போதிய அறிவுறுத்தல்கள் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.

தேர்தல் அலுவலக அதிகாரிகள் மட்டுமன்றி கட்சிகள், வேட்பாளர்களும் புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முக்கியமாக சுகாதாரத்துறையின் வழிகாட்டல்களை அனைவரும் பொறுப்புடன் பேண வேண்டும்.அனைத்து வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல் தினத்துக்கு முன்னைய இரண்டு தினங்களும் வாக்களிப்பு நாளன்றும் சுகாதார அதிகாரிகளால் கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

ஒரு கோடி 60 இலட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் சுகாதார நடவடிக்கைகளை கையாளும்போது நிறையவே அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.சமூக இடைவெளி பேணப்படும் போது வாக்களிப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்கலாம்.

ஆகவே காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பு மாலை 5 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். இதன் பொருட்டு ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளர்களை பல பிரிவுகளாக பிரித்து வாக்களிப்பை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.இது குறித்து ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது.

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதே சமயம் சுகாதாரச் செயற்பாடுகளை அவதானிப்பதற்கு பல வாக்களிப்பு நிலையங்களை ஒன்றிணைத்து சுகாதாரத்துறை உயரதிகாரிகளைக் கொண்ட நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் தேர்தலில் சுகாதாரத்துறையினர் தயாரித்து வழங்கியிருக்கும் வழி காட்டல் அறிக்கையை பின்பற்றுவதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டல் அறிக்கையில் பல்வேறு விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுடன் சிபாரிசுகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here