நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானவர்கள் என இனங் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசிய, பெரலஸ் மற்றும் பங்களதேஸ் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானவர்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.
அத்துடன் 821 பேர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுறுதியாகியிருந்த நிலையில் குணமடைந்த மேலும் 10 பேர் நேற்று மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியிலிருந்து குணமடைந்துள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 811 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 கடற்படை சிப்பாய்கள் குணமடைந்துள்ளனர்.கடற்படை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.டி.எச், ஹோமாகமை மற்றும் மினுவாங்கொடை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை சிப்பாய்கள் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள கடற்படை சிப்பாய்களின் மொத்த எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் , பூசா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் நிறைவடைந்த 14 பேர் நேற்றைய தினம் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.இதன்படி அந்த முகாமில் இருந்து இதுவரை 218 பேர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த நிலையில் வெளியேறியுள்ளனர்.
தொடர்ந்தும் 99 கடற்படை சிப்பாய்கள் அங்கு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா காரணமாக மேலும் ஒருவர் நேற்று காலை உயிரிழந்தார்.
அண்மையில் குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் குருணாகலை – ரிதிகம பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.



