எதிர்வரும் 17ஆம் திகதி வரை 62,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

கடந்த வியாழக்கிழமை 03.09.2020 அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பட்டதாரி அல்லது இதற்கு முன்னர் தொழில் ஒன்றிலிருந்து ஊழியர் சேமலாபநிதி நிதியத்தின் அங்கத்துவராக இருந்தால் மேற்படி தொழில்வாய்ப்பு கிடைக்காமல் போகுமென அதற்கான செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், விண்ணப்பதாரிகள் தமது உண்மையான நிலையை குறிப்பிட்டு மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும். 

சில பட்டதாரிகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு தொழில் இல்லாத நிலையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை கருத்திற்கொண்டு தாம் பெற்றுக்கொண்ட பட்டத்திற்கு பொருத்தமற்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களென மேற்படி செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறு தமக்கு பொருத்தமில்லாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்டுள்ள பட்டதாரிகள் இத்தகைய அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு தமது மேன்முறையீட்டை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டும். 
மேற்படி வேலைத் திட்டத்தின் கீழ் 50,000 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய மேலும் 12,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதனடிப்படையில் முதல்கட்ட தெரிவில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் மாத்திரம் மேன்முறையீட்டிற்காக விண்ணப்பிக்க முடியும். எனினும் மேன்முறையீட்டின் போது சகல ஆவணங்களும் உரிய மதிப்பீடுகள் மற்றும் உறுதிப்படுத்தல்களுக்கு உட்படுத்தி குறித்த பட்டதாரிகள் தெரிவு செய்யப்படுவதுடன் மேலும் வழங்கப்படும் 12000 நியமனத்திற்குள் உள்வாங்கப்படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here