பாடசாலையும் சமூகமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவிற்கு நெருங்கிய தொடர்பை உடையனவாகும்.
அதாவது ஒரு சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தில் உள்ள பாடசாலையிலும், அதேபோல் ஒரு பாடசாலையின் வளர்ச்சி அது அமைந்துள்ள சமூகத்திலும் தங்கியுள்ளமை பிரதான விடயமாகும்.
எனவே பாடசாலை , சமூகம் என்பவற்றுக்கு இடையிலான உறவுநிலை சமூகத்தால் பாடசாலையும்
பாடசாலையால் சமூகமும் பயன்பெறக்கூடிய தன்மை கொண்டதாக அமைய வேண்டும்.
சமுதாயத்தில் காணப்படுகின்ற சமூக நிறுவனங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக பாடசாலை அமைந்துள்ளது.
சமூகத்திற்கு அமைய எவ்வாறு வாழ வேண்டும்? என்பதை வலியுறுத்தும் ஒரு அங்கமாகவும் இது மிளிர்கின்றது.
சமூக உறவை வளர்ப்பதற்கு சமூகம் எந்தெந்த வகையில் பாடசாலைக்கு உதவலாம் என்பது
மட்டுமல்லாது பாடசாலையானது எந்தெந்த வகையில் சமூகத்திற்கு உதவலாம் என்பதனையும் இனங்கண்டு செயற்பட வேண்டும்.
சமூகம் பாடசாலைக்கு எவ்விதம் உதவலாம் என்பதனை சிந்திக்கும் போது பாடசாலை செயற்பாடுகளில்
சமூகம் பார்வையாளராக இருக்காமல் பங்குதாரர்களாக மாறுவது அவசியமாகும்.
கடந்த காலத்தில் பாடசாலை, சமூகம் என்பது அதிபர், ஆசிரியர்களுடன் பெற்றோரை மாத்திரமே கருதியது.
ஆனால் தற்காலத்தில் பாடசாலை சமூகத்தினை நாம் விரிந்த அடிப்படையில்
நோக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அந்தவகையில் பாடசாலையின் பங்குதாரர்கள் யார்? அல்லது பாடசாலைக்கு உரித்துடையவர்கள் யார்? என்பதை நாம் முதலில் கண்டுகொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறான வினாக்களுக்கு விடையாக அதிபர், ஆசிரியர், பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி, சங்க உறுப்பினர்கள், அரசாங்க நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், நலன் விரும்பிகள் போன்றவர்களை குறிப்பிடலாம்.
பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களிடையே சமூக உறவை மேம்படுத்துவதில்
ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.
அவர்களால் வழங்கப்படும் வழிகாட்டல்களை தங்களது மனதில் நிலை நிறுத்தி மாணவர்கள் நாளைய சமூகத்தில் தங்களுக்கான ஒரு நேர் நடத்தை உலகை உருவாக்கி கொள்ள முயல்கின்றார்கள்.
பாடசாலைகள் சமூக உறவினை வலுப்படுத்தும் செயற்பாடுகளை பாடங்கள் வாயிலாகவும், ஒழுக்காற்று
செயன்முறைகள் வாயிலாகவும் நேரடியாக மேற்கொண்டு வருகின்றன.
அவற்றில் சமூகத்தின் நன்மை கருதி செய்யப்படும் செயற்பாடுகளே அதிகளவில் செல்வாக்கு செலுத்துகின்றன.
இதன் மூலம் மனித வாழ்வின் அனைத்து சமூக பண்பாட்டுக் கூறுகளும் மேம்பாடுடையதாக மாற்றம் அடையும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
சமூகத்தினுடைய வளர்ச்சிக்குத் தடையாக அமையும் தொற்றுநோய்கள், சமூக விரோத
செயற்பாடுகள் (புகைத்தல்) என்பவற்றிற்கு எதிராக சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில்
பாடசாலைகளில் வீதி நாடகங்கள், துண்டுப்பிரசுரங்கள், சிரமதான வேலைத்திட்டங்கள் என்பன
மேற்கொள்ளப்படுவதனால் பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவானது மேலும் வலுப்பெறுகின்றது.
சமூகத்தில் ஒரு நற்பிரஜையாக வாழ்வாங்கு வாழ்வதற்குறிய அறம், ஒழுக்கம் மற்றும் பொருத்தமான கீழ்ப்படிவுகளை பாடசாலையானது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளின் மூலமாக வழங்கி மாணவர்களினை நல்வழிப்படுத்துகின்றது.
அத்துடன் பாடசாலைகளில் இன, மத பேதமின்றி நடத்தப்படும் நிகழ்வுகளினால் மாணவர்களிடத்தே
எதிர்கால சமூகத்தில் எவ்வித பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக வாழ்வதற்கான அடித்தளம் இடப்படுகின்றது.
அவ்வாறே இங்கு மேற்கொள்ளப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகள், போட்டி நிகழ்ச்சிகள்,
கல்வித்திட்டங்கள் என்பன வாயிலாகவும் சகல அடிப்படை தேர்ச்சிகளையும் வழங்கி சிறந்த சமூக உறுப்பினராக மாணவர்களை மாற்றியமைக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.
கல்வி நிலையங்கள் எவ்வழியோ சமூகமும் அவ்வழி என்பது நடப்பியலாகும்.
இங்கு சமூக இயல்புக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்தவும், இசைவு மிக்கவர்களாக உருவாக்கவும் தேவையான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பபடுகின்றன.
அவ்வகையில் சமூக உணர்வை வளர்த்தல், சமூக நடத்தைகளுடன் இசைவுபடுத்தல், சமூக கட்டுபாடுகளுக்கு கீழ்படியச் செய்தல், சமூக விழுமியங்களை புகட்டல், புதிய தொழிநுட்ப
அறிவுக்கு இசைவுபட வைத்தல், சமூக தொடர்பாடலை வளமாக்கிக் கொள்ள உதவுதல் போன்றன அவற்றில்
முக்கியமானவையாகும்.
சமூக உறவினை ‘கற்றல்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரும் பணியினை பாடசாலை செய்வதுடன்
என்றுமே முதல் தர கல்வி நிறுவனமாகவும் இது தொழிற்படுகின்றது.
சமூகத்துடனான உறவை ஏற்படுத்தும் அடிப்படை அம்சம் தொடர்பாடல் ஆகும்.
வினைத்திறன் மிக்க தொடர்பாடலுக்கான அடித்தளத்தை உருவாக்குவதில் பாடசாலை முக்கிய பங்கு வகிக்கின்றது.
அத்தோடு பாடசாலைக்குரிய தனித்துவமிக்க ஆளுமையானது மாணவர்கள் மீதும் சமூகத்தின் மீதும்
நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கினை செலுத்துவதோடு சமூகத்திற்கும் பாடசாலைக்குமான உறவினை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைகின்றது.
சமூகத்தினுடைய மரபுகளையும் ஒழுக்கலாறுகளையும் பின்பற்றுவதற்காக பாடசாலையானது
மாணவர்களுக்கான முன்மாதிரிகளை வழங்கும் சமூக நிறுவனமாக திகழ்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளின் முக்கிய பங்காளர்களாக ஆசிரியர்களும் உற்ற நண்பர்களுமே விளங்குகிறார்கள்.
பாடசாலை செயற்பாட்டில் முக்கியமானது ஒருவரின் வாழ்க்கை முழுவதுமோ அல்லது வாழ்க்கையின்
பெரும் பகுதியிலோ இணைந்து செல்லக் கூடிய நண்பன் அல்லது நண்பியை வழங்குவதாகும்.
பாடசாலை உருவாக்கி கொடுக்கும் இவ்வாறான நட்பு சமூக உறவின் வளர்ச்சிக்குறிய இயங்குவிசையாக தொழிற்படுகின்றன.
குறித்த ஒவ்வொரு மாணவனின் எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் இந்த நட்பு வலிமையான வகிபங்கினை வழங்குகின்றது.
சில வேளைகளில் குடும்பத்தினால் கிடைக்கப்பெறாத உளவியல் பாதுகாப்பும் உற்சாகமும் பாடசாலை நட்புடைமையால் கிடைக்கும்போது மாணவன் அச் சமூகத்தின் சிறந்த பிரஜையாக உருவெடுக்க வாய்ப்பாக அமைகின்றது.
ஒரு பாடசாலையின் சகல செயற்பாடுகளும் சிறப்பாக அமையும் போது அங்கு கற்கும்
மாணவர்களின் நடவடிக்கைகளும், செம்மைப்படுத்தப்பட்டதாகவே காணப்படும்.
எனவே மாணவ சமுதாயம் சரியாக வழிகாட்டப்படும் போது தான் நிச்சயமாக சமூகத்துடனான உறவும் முழுமை அடைவதோடு இதன் மூலம் எம் நாடானது சகல துறைகளிலும் வளர்ச்சி பெற்று அபிவிருத்தி பாதையை நோக்கி செல்லும் சந்தர்ப்பம் உருவாக்கப்படுகின்றது.
பாடசாலையுடன் சார்ந்த நபர்களின் முன்மாதிரியான சிறந்த வாழ்க்கையே எதிர்கால மாணவ சமூகத்தின் வாழ்வை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
எனவே பாடசாலையின் வெற்றியே சமூகத்தின் வெற்றி என்பதை மனதில் நிலைநிறுத்தி செயற்பட வேண்டும்.
வவித்திரா மகாதேவா
கல்வியியல் சிறப்புக் கற்கை
இரண்டாம் வருடம் கலைக்கலாசார பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்



