முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய ஹிஷாலினி ஜுட் குமார், தொடர்ச்சியாக நீண்ட காலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சொலிஷ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிஷாலினி நீண்ட காலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை, விசேட சட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான மூவர் அடங்கிய வைத்திய குழுவினால் நடத்தப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட சந்தேகநபர்கள், குறித்த சம்பவத்தை மறைப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சித்துள்ளமைக்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான பின்னணியில், ஹிஷாலியின் மரணம், மனித படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் பிரதி சொலிஷ்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக வெளிநாட்டிற்கு தற்போது சென்றுள்ள வைத்தியரினால் பதியப்பட்டுள்ள விடயம் குறித்து பாரிய சந்தேகம் நிலவுதாக பிரதி சொலிஷ்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

ஹிஷாலினி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில், அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு சென்ற போது, 5000 ரூபா தாள்களுடனான பணத் தொகையொன்றை, ரிஷாட் பதியூதீனின் மனைவி, தரகரிடம் வழங்கியுள்ளமைக்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிஷாலினியை, வேறொரு இடத்தில் தீ வைத்து, குறித்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் பிரதி சொலிஷ்டர் ஜெனரல் நீதிமன்றில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்த சந்தர்ப்பத்தில், தீ காயங்களுக்கு உள்ளானவரின் உடலை குளிர்மையாக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அம்பியூலன்ஸ் ஊழியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும், சம்பவ இடத்திற்கு அம்பியூலன்ஸ் செல்லும் வேளையில், ஆலோசனை வழங்கப்பட்ட விதத்தில், எந்த நடவடிக்கைகளும் செய்யப்படவில்லை என பிரதி சொலிஷ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் மன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர், ஹிஷாலினியின் குடும்பத்திற்கு பணம் வழங்குவதாகவும், விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்ட பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸார் இதுவரை செயற்படவில்லை என திலிப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 6ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here