திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்களில் காணப்படும் நெற்கதிர் விளைச்சல்களை குருவி இனமொன்று அழித்துள்ளதாக தெரியவருகிறது. 

இவை கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களினுள் வந்து நெற்கதிர்களை துவம்சம் செய்து விட்டு செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,”தெனையான்” என்று அழைக்கப்படும் ஒரு வகை குருவி இனமே இவ்வாறு விவசாய நெல் இனங்களை அழித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

கிண்ணியா பகுதியில் உள்ள பனிச்சங்குளம், மனியரசன் குளம், வெள்ளங் குளம், நடுஊற்று குளம், குரங்கு பாஞ்சான் குளம், துவரங்குளம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களில் செய்கை பண்ணப்படும் விவசாய நிலங்களை அழித்து வருகின்றன.

கூட்டம் கூட்டமாக சுமார் 5000 இற்கும் மேற்பட்ட குருவிகள் ஒரே தடவையில் பரவலாக வயல் நிலங்களில் இறங்கி நெல் கதிர்களை துவம்சம் செய்கின்றன.

இதனை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. சிறுபோக செய்கையை நம்பியும் மழைக் காலநீரினை நம்பியும் செய்யப்படும் விவசாயம் முழுமையாக அழிவடைந்து வருகின்றன.

குறித்த பனிச்சங்குளம் பகுதியில் மாத்திரம் அண்ணளவாக செய்கை பண்ணப்பட்ட சுமார் 110 ஏக்கரில் சுமாராக 25 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளன. 

குறித்த குருவிக் கூட்டமானது காலை 5.30 மணி தொடக்கம் 10 மணி வரையிலான நேரங்களிலும் மாலை 3.30 மணி தொடக்கம் 6 மணி வரையிலான நேரங்களிலும் வயல்களை அழிக்கின்றன.

உயரிய சத்தம் மற்றும் கூச்சலிடுவதனால் குருவிக் கூட்டம் பறந்து சென்றாலும் மீண்டும் வயல் நிலங்களை நோக்கி மறு திசைக்கு சென்று இறங்குகின்றன. 

ஊது குழல் சத்தம் மூலமாக காவல் காக்க வேண்டிய நிலை பகல் நேரங்களிலும் நிர்ப்பந்தமாகியுள்ளன.

இப்பறவையினங்களின் தொல்லை கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இருந்தாலும் அரச திணைக்களங்கள் இதனை கட்டுப்படுத்தவோ, இது தொடர்பில் ஆராய்வில் ஈடுபடவோ முன்வரவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே நிரந்தரமான தீர்வினை தங்களுக்கு சாதகமாக்கி தருமாறும் அழிவடைந்த விவசாய நிலங்களுக்கு நஷ்ட ஈடுகளையும் வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here