கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி கத்தோலிக்க திருப்பலி இடம்பெற்ற நேரத்தில் தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் இடம்பெற்றது.
இதற்கு காரணமான முக்கிய சூத்திரதாரி குறித்து மாறுபட்ட பல தகவல்கள் வெளியாகின்றன.
இந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய குண்டுவெடிப்பாளரின் மனைவி சாரா இந்தியாவில் இருப்பதாக திட்டவட்டமான தகவல்கள் இருந்தால், அவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய, சாரா என்ற பெண் இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது என்றும், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
அவர் இந்தியாவில் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டால், அவரை இலங்கைக்கு ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
இருப்பினும், அவர் சட்டவிரோதமாக இலங்கையை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என்ற நம்பிக்கையைத் தவிர வேறு எந்த தகவலும் இல்லை என்றார்.
இவ்வாறு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல்வேறு கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்ப்பு கிட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



