திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிக்கும் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வாக்களிக்கும் நிலையங்களில் ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாவும் வரிசையில் நின்று தமது வாக்குப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதாரத்தினை விதிமுறைகளை பேணும் வகையில் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இம்முறை பதிவுசெய்யப்பட்ட 13 கட்சிகள் மற்றும் 14 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

இம்மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி இத்தேர்தலில் மொத்தமாக இரண்டு இலட்சத்து 88 ஆயிரத்து 868 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

இதில் சேருவில தேர்தல் தொகுதியில் 80912 வாக்காளர்களும், திருகோணமலை தேர்தல்தொகுதியில் 97065 வாக்காளர்களும், மூதூர் தேர்தல்தொகுதியில் ஒரு இலட்சத்து பத்தாயிரத்து 891 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமாக 307 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகள் திருகோணமலை விபுலானந்தாக் கல்லூரியில் நடைபெறவுள்ளதோடு, 44 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.

சுமார் 5000இற்கு மேற்பட்ட அரச அதிகாரிகளும், ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு இரு பொலிஸார் உட்பட பல விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here