நல்லாட்சி அரசாங்கம் மத்தல சர்வதேச விமான நிலையத்தை நெல் களஞ்சிய சாலையாக மாற்றியமையால் ஏற்பட்ட இழப்பீடுகளை மதிப்பீடு செய்து ஒருவாரக்காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
மத்தல விமான நிலையம் நெல் களஞ்சியசாலையாக மாற்றப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விமான நிலையமும் விமானசேவை நிறுவனமும் இதுவரை துல்லியமான மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை என கலந்துரையாடலில் கலந்துகொண்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சர் பிரசன்னா ரணதுங்கவிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது குறித்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியிடம் அமைச்சர் விசாரித்தபோது, அவரும் அதை ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக துல்லியமாக மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியத்தை அமைச்சர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்திருந்தார்.
இயற்கையான மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மத்தல விமானநிலையத்தை நிர்வகிக்கும் செயற்பாட்டை நல்லாட்சி அரசாங்கம் புறக்கணித்திருந்தமையை சுட்டிக்காட்டிய அமைச்சர், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இதனை வினைத்திறன்மிக்க விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.



